Monday, August 29, 2011

JUMPING INTO THE WORD NEST OF OTHERS !

பிறர் சொற்கூட்டுள் புகுந்து ....!
&
பிறர் சொற்கூட்டுள் புகுந்து
அவர் லஹரி[அலைகள்] மிதந்து
எனைக் கடந்து இறைவா !
உனை அடையும் ஆசை எனக்கில்லை --
என் படகு எளிமைதான் -
என் வார்த்தை கொச்சைதான்
என் வியர்வையில் நனைந்ததே-
என் பாடல் என் நெய்தலே !
என் படகில் நீ ஏறி வா -
உன் பாதி பெண்மையே
என் பாதி ஆண்மையே !
என் இல்லம் தாழ் குடிசைதனில்
நான் காதல் செய்வேன்--
உனை கடந்து என் உள் நடக்க
நீ விரும்பி வா !
-------சந்திர கலாதர் -----

O THAT SINGLE LINE FROM A BOOK I READ ..!

ஏதோ ஓர் வரி ஏதோ புத்தகத்தில் ...!
&
ஏதோ ஓர் வரி ஏதோ ஓர் புத்தகத்தில் இன்று--
எங்கோ அருவமாய் என் மனவிழிகளில் பழகு உருவமாய்
எனதருமைப் பெற்றோரை
என் தியானச் சிந்தை நேர் உயரே உயிர்ப்பித்தது ---
கற்றை கற்றையாய் நினைவுகள் வெண் தழலாய்
செங்கொழுந்தாய் என்னுள் எழுந்து என்னைத் தகித்து
என் கெட்டவை எல்லாம் பட்டு அழிய வெண் திருநீறாய்
நல்லவையாய் நான் கைப்பிடியாய்த் தூர்ந்துவிட--
அடர் அருவியென அவர் அங்கைத்தலம் ஜனித்த
அருட் பிரவாகங்கள் என்னுள் இங்கிதமாய் இறங்க
மின்னல் விரல்களாய் சக்தியின் துள்ளோட்டம்
அக்கைப்பிடி அணுவுக்குள் அணுவென விரைய
ஒளிமயமாய் ஓர் உருவாய் என்னில் நான் ஜனித்தேன்-
இன்று நிகழ்ந்தது இது சத்தியம் .
-----சந்திர கலாதர்

Friday, August 26, 2011

i am the last flower of this flowering season ..

i am the last flower of this flowering season!
&
I am the last flower of this flowering season
and my tree and the season looks jaded and tired--
there is none to take leave of
nor anyone to see me off
when the softest wind would gently snap my ties
with the slender stalk that dreamily holds me aloft
and send me in swirling descent
for a final kiss of the earth
at the end of my daydreams in light and air--
the nature's harsh laws have no mercy
once the youth and beauty evaporate in hours
between sunrise and set ,unlocking frial bonds--
the tree, my bearer, seems to have no tears for me;
seems to treat all in philosophical silence--
let me fill the air and space with fragrance and colours
in the fleeting moments of my brief journey
before my hour is done!
&
-------------s.chandra kalaadhar

Saturday, August 20, 2011

THE WAY OF THE WORLD

உலகியல் சொல்வேன் !
[THE WAY OF THE WORLD ]
&
டும்..டும்..டும்டும்டும்டும் ....!
இதனால் சகல ஜனங்களுக்கும் பறை அறைந்து
அறிவிப்பது என்னவென்றால் .....!
&
இதோ அறிவீர்--
இனிய வார்த்தைகளால் என் உதடுகள்
அழகுற உமைப் புகழ்ந்து பூக்கையில்
இதயத்தின் ஆழ்ந்த இருட்டு இடுக்குகளில்
அவற்றின் வேர்கள்
அழுகிய சேற்றில் நாறும் அவலங்களில்
உமைப் புரட்டி எடுக்கின்றன
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
ஏதோ ஒன்றை எதிர்த்து
கூரிய தர்க்கக் கணைகளைக்
கருணையின்றிப் பொழிகையில்
அதனையே என் நெஞ்சுள்
மலர் சொரிந்து பாதம் பணிந்து
அனைத்து மரியாதைகளுடன் வரவேற்கிறேன்
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் நாவும் இதயமும்
எந்நேரமும் எதிரும் புதிருமாய் --
எனவேதான் சொல்கிறேன் -
ஓயாது வித்தை காட்டும் என் நாவினைச் சாதுர்யமாய்க் கடந்து
உன் செவிக்கலத்தை என் இதயத்துள் இட்டுச் செல் -
அதன் புதிரான மொழிகளைக் கேள் .
&
பெண்பற்றி மிக இழிவாய்
நான் உரக்கப் பறை கொட்டுகையில்
என் திருட்டுப் பார்வைகள் காமத் தகிப்பில்
ஓய்வின்றிப் பெண் நிழலைத் தேடித் தவிக்கின்றது -
&
மனம் நெகிழும் மொழிகளில்
பெண் இழிபடுதலை முடித்திட
உலகிற்கு முனைந்து போதிக்கையில்--
அதுவே என் கனல் கண்களுக்கு
ஆர்ப்பாட்டமான அறுசுவை விருந்து
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
இரு துருவங்கள் என் இதயமும் நாவும் --
எனவே என்னுள் மூழ்கிப்
புதைத்த எண்ணங்களைத்
தோண்டிப் பறித்துக் கொள்வீர் -
&
வாழ்விற்கு முற்றுப் புள்ளி வைக்க
உறுதியாய்த் திட்டமிடுகையில்-
வாழ்வின் நைந்த ஆசை வேர்ப் பிசிறுகள்
ஏமாற்ற மலட்டு முகடுகளிலும்
ஈர நம்பிக்கை இழைகளைக் கண்டு மாறிவிடுகிறது
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் சிரிப்பின் வெடி முழக்கங்கள்
திக்கெங்கும் வானில்
ஆர்ப்பரித்துப் புரளுகையில் -
என் விம்மல் பேரலைகள் உள்ளிருந்து
இதயக் கரைகளில் முட்டி மோதி
நெஞ்சில் அறைந்து கொள்கின்றன
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் முகமேடை தோன்றும் உணர்ச்சி நாடகங்களை
உலகீர் ..நம்பாதீர் !
புதைத்த இதயத்தின் ஒளித்த மொழிகளுக்கு
உமது செவியை ஓட்டிச் செல்வீர் !
பறை சாற்றி விட்டேன் ;
பின் எனைக் குறை காணாதீர் !
டும்..டும்.டும்டும் ..டும்டும் !
&
சந்திர கலாதர்

Thursday, August 18, 2011

IS THIS THE POISON HE PLANTED IN ME ?

அவன் வைத்த நஞ்சா ?
&
அவன் தகாதன சொன்னான் -
மௌனமாய்க் கேட்டு இருந்தேன் ;
பின் -
என்னுள் எட்டிப் பார்த்தேன் ..
ஆ..ஆழத்தில்....
வெகு வெகு ஆழத்தில்
ஓர் சிறு உருவம் --
சிறு முளை விட்டதுபோல்
கூனி அமர்ந்திருந்தது -
பார்க்கையிலேயே அது வளர்ந்தது ..
விரைவாய் ..பெரிதாய் ..
விண்கல வேகமாய் -
ஒ !
அவன் வைத்த நஞ்சா ?
இத்தனை பெரிதாய்.கனமாய்
என் தலை மீது அழுத்துகிறது--
அறிவைத் தீய்க்கிறது !
&
சந்திர கலாதர்

FOR WHAT ELSE MY LONGING ?

வேறு எதற்கு என் ஏக்கம் ?
&
சூரியனிடம் ஓர் தயக்கம்
ஒளியிடம் ஒரு சோகம்
காலையிடம் ஒரு தூக்கம்
வானிடம் ஓர் சோம்பல் --
ஆனால்...
குளிர் காற்றிடம் மட்டும்
ஒரு சுறுசுறுப்பு -
திறந்த விண்வெளி -
தொலைவான தொடுவானம் ;
சிதறிய பனை மரங்கள் --
சிறு குடிசைகளின் பேரமைதி
எல்லையில்லாப் பெரு வானம்--
மேனி சிலிர்க்குதடி !
வேறு எதற்கு என் ஏக்கம் ?
&
சந்திர கலாதர்

WHICH COULD DEFY THE TIME'S ONSLAUGHT ?

காலம் கடக்கும் ஆக்கங்கள்
&
எத்தனை படைப்புகள் !
எத்தனை நூல்கள் !
காலத்தின் முதுகில்
ஓயாத விதைப்புகள்--
எவை எவை வானுள் நிமிர்ந்து
சந்ததிகளைச் சந்திக்கும் !
எவை எவை மிதிபடும் ?
வியப்பான அச்சங்கள் !
அனைத்துமே அன்றன்றைய
அற்ப ஈசல்களா ?
காலத்தின் காலோடு
சலியாது நடைபோடும்
வலிய பாதங்களை
எது நிர்ணயிப்பது ?
&
சந்திர கலாதர்

O THE NIGHT WATCHMAN !

ஒ ..இரவுக் கூர்க்காவே..!
&
நிலவே !
உன்னைப் புதிய பார்வை
பார்க்கப் போகிறேன் --
&
எத்தனை குழந்தைகட்கு
யுகம் யுகமாய் நீ
பாற் சோறு ஊட்டி இருப்பாய் !
&
எத்தனை குழந்தைகள்
பிஞ்சுக் கரங்களால்
உன்னைப் பறிக்க வானுள்
விரல் விரித்து இருப்பர்--
&
எத்தனை தாய்மார்கள்
தங்கள் மழலைகளின் முகங்களில்
உன்னைக் கற்பனைத்து இருப்பர் --
&
எத்தனை நங்கையரின்
நெஞ்ச மஞ்சங்களில்
நீ சிறைப்பட்டு இருப்பாய் !
&
எத்தனை கவிஞர்களின்
பித்தான முத்தங்கள்
உன்னை ஈரப்படுத்தி இருக்கும்--
&
எத்தனை விரக தாபப் பார்வைகள்
பிரிவு நேரங்களின்
எட்டாத் தொலைவுகளில் இருந்து
உன்னில் ஒரே நொடியில்
புகுந்து சங்கமித்திருக்கும் --
&
காதலர்களின் பிரிவுத் துயரங்கள்
உன்னைத் தேய்த்து விடுகின்றனவோ ?
அவர் கூடல் நிறைவுகள்
உன் பூரிப்பின் நிலைக்களனோ ?
ஓ ! இரவுக் கூர்க்காவே ..!
&
---சந்திர கலாதர்
[29.07.1987,காலை 09.45]

Tuesday, August 16, 2011

ARE NATURE POEMS INFERIOR ?

மனித நேயப் போர்வைகள்
&
" சமுதாய விழியற்ற
மனித உருக்கமற்ற
எழுத்துக்களும் கவிதைகளா ? "--
இப்படிக் கொக்கரித்தல்
இன்றைய வா[வே]டிக்கை !
&
இரண்டு கவிதைகளில்
கண்ணீர் பாய்ச்சிவிட்டால்
கனல் கக்கி விட்டால்
' மானுடக் காவலன் ' எனத் தானே
மகுடம் சூட்டிக் கொள்ளும்
'வேடம் 'தாங்கல்களின்
வெற்றுப் பிதற்றல் இது !
&
சிரிப்புத்தான் வருகிறது --
இவர்கள் எழுத்துக்கள்
எத்தனை சத்தியம் ?
&
ஏ !சொல் வீரர்களே !
உங்கள் மலட்டுச் செடிகளில்
செயல் மொட்டுக்கள்
என்றேனும் முகிழ்த்ததுண்டா ?
&
ஓ ! உபதேசிகளே !
வார்த்தை வணிகர்களே !
' சமுதாயச் சிற்பி ' பட்டங்கள்தானே
தாளாத தாகங்கள் ?
&
கவிதைத் தூரிகையால்
விதவையின் நெற்றியில்
'திலக' நிலவு தீட்டிட
வற்றாத ஆசை பலர்க்கு !
எழுத்து உலர்வதற்குள்
' புரட்சி மாவீரன் 'எனத் தாமே
பூரித்துப் போகும் புரட்டர்கள் !
பேனாதானே --
உள்ளிருப்பதும் இதயப் பொய்'மை'தானே !
&
ஒன்று கேட்பேன் --
ஊர் அறிய சட்டம் சாட்சி நிற்க
விதவைக்கு நெற்றித் திலகமிட
நெஞ்சில் உமக்கு வலிவுண்டோ?
அன்றி உம் மைந்தற்கு
விதவைகளை மணம் முடிக்க
இதயத் தூய்மைதான் உண்டா ?
&
இது நிகழின் இவர் பெயரைப்
பொன் வரிகளில் வடிப்பேன் --
அன்றி கவிதைக் கனலாலே
சுட்டுப் பொசுக்குவேன் !
&
ஜாதி இல்லை எனத் தான் எழுதியதுமே
பாரதி எனும் கனவில் முண்டாசு தேடி
உரத்துக் கத்தும் வறட்டுத் தவளைகாள்--
பாரதி வாழ்ந்தபின்தான் சொல்லானான் !
அவன் வாழ்க்கைச் சரிதம்
அகல நடந்தால் தனியே
அவன் ஆழ உழுத வழி
விழிமுன் விரிந்து
அவன் மீசைக்குப் பொருள் சொல்லும் !
&
சேரி தாழ்த்தப்பட்டோர் எனப்
பொய்ப்புயல்கள் உருட்டுவோரே !
ஓட்டை குடிசையின்
ஏழை மங்கை ஒருத்திக்கு
விளம்பர ஊளைகள் இன்றி
சட்டம் கோலோச்ச
உண்மை மணவாழ்வு
எவர் உம்மில் தருவார் ?
&
வரதட்சணைக் கொடுமையை
வகை வகையாய் எழுதி அழுவோரே --
நெஞ்சில் கை வைப்பீர் --
மின்னும் பொன் இன்றி
வரிசைகள் வாராது
நங்கை நல்லாளை
இல்லம் வந்திடுக எனச்
செயலிற் சிறந்தவர் உம்மில் யார் ?
&
ஒன்றா ? இரண்டா ?
இவர் பாடும் மனித நேயங்கள் !
போர்த்திடும் போர்வைகள் -
சுழற்றும் அட்டைக் கத்திகள் !
வார்த்தை தாசர்களே !
சொற் பந்து தீரரே !
செயற் போட்டியில்
என்று முன் நிற்பீர் ?
&
செயலற்ற வீணரின்
வார்த்தை நரிகளை
என் கர்ஜனை கொன்றுவிடும் --
கயமைக் குருதி குடித்து
கோபம் தணித்திட என் கவிதை
புலியெனப் பாய்ந்து வரும் !
&
தகுதிகள் இன்றிப் பாடுவோர் தம்மால்
இத்தாரணி தாழ்ந்ததம்மா !
மானுடம் மடிந்ததம்மா --
இந்த மண்ணிடைக் காளான்கள்
மக்கி மடிந்திட எரிதழல் சூரியன் ஆகிடுவோம் !
&
சம தர்மங்களில் சொத்துக் குவிப்போனும்
ஒளி வெள்ளத்தில் ஊறித்
' தொண்டை ' வஞ்சிப்பானும்
நாளிதழ் நடுவே பொய்முகம் தாங்கிப்
போதனை செய்வோனும்
ஆன்மத் தூய்மை இற்று
'பிண' எழுத்துக் கோர்ப்பானும்
அறவே ஒழிந்தாலே
'மானுடம் 'மலர்ந்துவிடும்!
&
நோய்க் கொசுக்கள் பொங்கிடப் பறந்திடும்
நாற்றப் பன்றியும் இம்மன ஊனரைக் காட்டிலும்
வெகு மேன்மை என்று உரைப்பேன்
&
முதலில் மௌனச் செயலாவீர் --
செயல் நடக்கும் போதினில்
வார்த்தைப் 'பாடை'களின்
ஊர்வலங்கள் தேவை இல்லை --
உண்மையின் பாதம் பூமியில் படுகையில்
எம்மொழிக்குமே அங்கு வேலையில்லை !
&
கவிதை என்பது
ஓர் வழிப் பாதை அல்லவே --
மானுடத்தோடு விண்ணையும் மண்ணையும்
இயற்கையின் படைப்பு அனைத்தையும்
அள்ளி அணைத்துத் துள்ளிப் பாடி
வண்ணப் பொழிவில் நீந்தித் திளைத்து
அற்பம் என்று எதனையும் கருதாது
ஒவ்வொன்றின் உன்னதம் உரக்கக் கூறி
உணர்வில் பறப்பது கவிதைச் சிறகு --
ஒளியைப் பிளந்தாலோ ஏழு நிறங்கள் ;
உலகைப் பார்த்தாலோ எண்ணிலாச் சுவைகள் --
வகை வகை அற்ற பாதைகள் இன்றேல்
ஓர் நிறம் கொண்ட மொட்டை வெளியாய்
வாழ்வே சோர்வாய் முடங்கிடும் அன்றோ?
கவிதை எனும் ' காமிரா ' கொண்டு
இயற்கையை எங்கும் என் காதலில் நாடி
சுவைத் தேனாய் படைத்திடுவேன் !
&
------சந்திர கலாதர்

Sunday, August 14, 2011

what else i would ask for this morning ?

வேறென்ன வேண்டும்  இக்காலையில் ?
&
நெற்றிப் பொட்டாய் முருங்கை இலைகள் --
குளிர் காற்றைக் கொஞ்சம் தன் நெருப்பில் வாட்டி
இன்ப ஓட்டம் தரும் சூரியன் --
இலை மார்பகங்களில் குறும்புத் தாவல் தாவி
விளையாடிச் செல்லும் குளிர் காற்று --
தரையில் , சுவரில் எதையும் விடாது நுணுக்கமாய்
நிழல் ஓவியம் தீட்டும் ஆதவன் --
வேறென்ன வேண்டும் இக் காலையில் ?
&
---சந்திர கலாதர்

FEED THE TREES WITH YOUR NECTAR

கிணறே ! அமுதம் தா !
&
கிணற்றிலிருந்து வாளிவாளியாக ,நூற்றுக்கும் மிகையாக இறைக்கும்பொழுது கிணறு என்னிடம் கெஞ்சுவதுபோல் உணர்கிறேன் .
ஆனால் கிணறே ! எனக்காக இறைக்கவில்லை ; இதோ வீட்டைச் சுற்றி வளர்ந்து தாகமாய் ,பசியாய் ஏழு நாட்கள் காத்திருந்து ஞாயிறு
என் வரவு பார்த்து ஏங்குகின்றனவே இந்த மரக் குழந்தைகளுக்குத்தான் ! எனவே தாய்ப் பாலாய் நெஞ்சார வழங்கிடு அமுத சுரபியே !
------சந்திர கலாதர்

--

MY CORRECT ADDRESS

என் சரியான முகவரி
&
வானத்தில் வாழ்பவன் நான் -
மேக மெத்தைகளில் புரள்பவன்
வண்ணக் கற்பனை விரிபவன்
புல்லின் கீதங்கள் புரிந்தவன்
பளிங்கு நீரோடைச் சிரிப்பினன் -
தென்றலுக்குத் தெரியும்
என் சரியான முகவரி !
&
சந்திர கலாதர்

ANALYSE MYSELF.

என்னை அலசுகிறேன்
&
தொலைந்து போன இளமையைவிட
தொலைத்துவிட்ட வாழ்க்கையைவிட
தொலைந்துபோன எண்ணங்களுக்காகவே
கண்ணீர் பெருக்கிக் கதறி அழுகிறேன்
முட்டி மோதி மூலைகளில் தேடுகிறேன்
&
சந்திர கலாதர்

Monday, August 8, 2011

A Boat In The Sky

வானத்திலே படகு
[குழந்தைப் பாடல் ]
&
வானத்திலே படகு
வட்டநிலாப் படகு
வெள்ளைநிறப் படகு
பால் பொங்கும் படகு !
&
யாரும் இல்லாப் படகு
கொள்ளை அழகுப் படகு
பாம்பு பேய்க்கு எல்லாம்
பயப்படாத படகு !
&
மேக அலைகள் புகுந்து
கிழித்து வரும் படகு
கோடி மீன்கள் பார்க்கப்
பவனி வரும் படகு !
&
காலை கப்பல்போலச்
சுட்டுப் பொசுக்காமல்
குளிரை அள்ளித் தூவிக்
கொஞ்சி வரும் படகு !
&
--சந்திர கலாதர்

Saturday, August 6, 2011

LORD ! SHOW ME THE WAY !

வழி விளக்கம் அருள்வாய் .
&
நள்ளிரவின் கறுமை-
திசை புரியா வான்வெளி -
சரஞ்சரமாய் காற்றில் நீந்தும்
சுற்றுலாப் பறவைகள் ஓர் நோக்காய் --
எங்கேயோ நீ அமர்ந்திருக்கிறாய்
கலங்கரை விளக்கமாய்-
கச்சிதமாய் வழி காட்டுகிறாய் --
&
சஞ்சலங்களால் குருடாகி
தன்னந் தனியாகி எங்கெங்கோ
பொழுதெல்லாம் அலைகிறேன் --
என் பாழும் மனதிற்கு
கண்மலர் ஒளி விரித்து
வழி விளக்கங்கள் அருளினால் என் ?
&
-- சந்திர கலாதர்

on a black steam train of olden days

குக்கூ குக்கூ ரயில் ....
&
[பழங்காலத்து கறுப்பு எஞ்சின் ரயில் ]
&
' குக்கூ குக்கூ ' ரயில்
புகையைக் கக்கும் ரயில் !
' ஜிகுஜிகு ' ' ஜிகுஜிகு ' ரயில்
சீறிவரும் ரயில் --
' கடக் கடக் ' ரயில்
ஆயிரம் சக்கர ரயில் --
தண்டவாளம் இரண்டில்
' கடக் சடக் ' ரயில் --
ஆற்றுப் பாலம் மேலே
' லொடக் கொடக் ' ரயில்--
பாதை மாறும்போது
' கீச்சுக் கீச்சு ' ரயில் --
யானைபோல எஞ்சின்
சூரியன் போலக் கண்ணு -
' புஸ்ஸு புஸ்ஸு ' மூச்சு
' கிச்சு கிச்சு ' எச்சில் --
அரக்கன்போலப் பசி
ஊட்ட ஊட்டத் தின்னும்--
பேயைப்போலத் தாகம்
ஊத்த ஊத்தக் குடிக்கும் --
பாம்புபோல உடம்பு
வயிறு முழுக்கத் தீனி -
நெளிந்து வளைந்து ஓட்டம்
இப்படி அப்படி ஆட்டம் -
பச்சை நிறம் பார்த்தால்
பாய்ந்து செல்லும் ரயில் -
சிவப்பு நிறம் பார்த்தால்
பயந்து நிற்கும் ரயில் -
ஊர் ஊராய் ஊர்ந்து
உள்ளங்களைச் சேர்க்கும் -
மழை வெயில் பாராது
இராப் பகலா ஓடும் !
&
---சந்திர கலாதர்