Thursday, June 30, 2011

Murder Of Rajiv Gandhi In 1991

ராஜீவ் காந்தியின் படுகொலை


கோழைக் கும்பலின்
கோரச் செயலால்
கமல முகத்தான்
கருகிச் சிதைந்தனனே  ...!
அந்தோ ! என்னென்பேன் --
ரத்தப் புயலில்
அன்பின் தீபம்
அணைந்தே போனதம்மா..!
நாட்டின் நலம் எண்ணி
வெடிமொழி ஒடுக்க
எழுந்தனள் வீறுடன்
அன்று உனதன்னை.. 
நெஞ்சிற்  குண்டேந்தி
ரத்தக்     களறியாய்     
இடுப்பில் உடைந்தே  
இம் மண்ணில் சரிந்த 
ரத்தமும் உலரவில்லை...!
சற்றும் அயர்வின்றி
இராப்பகல் இன்றி 
நிலை அரசு ஒன்றினை 
நாட்டிற்கு நயந்திட 
திக்கெல்லாம் கரம் கூப்பி 
கைகேட்டு வந்த உனை 
தமிழ்  நாட்டின் தலைக் குனிவாய்
இருள் நெஞ்சப் பதர் ஒன்று 
இருள் வேளை கொன்றதடா..!
பிண நரிகளின்  நய  வஞ்சகம்  
மறுபடி வென்றதையோ...!
என்ன வேதனை இது ?
ஓர் குடும்பமே 
கொலை வாயில்..!
நாட்டின் நல்லோரே --
காந்தி மகான் பெயர் கொண்டால் 
படுகொலைதான் பரிசாமோ ?

----சந்திர கலாதர்         
   

21, May , 1991 , A Cruel Night..

1991,மே  21.
இரவு..
கொடும் விதி எவ்வளவோ தடைகளைச்  மீறிச் சமாளித்து   
நாட்டின் பெருமகன் இளைஞன் ராஜீவை
திருபெரும்பூதூரின் இருட்டு மூலைக்கு இழுத்து வந்தது --
பொய்யாய்ப் புன்னகைத்துப்
 பூ ஆரம் சூடுவதாய்ப் பெண்ணிடைப் பேய்  
 ஒன்றையும் நிறுத்தி   வைத்தது--
வஞ்சக நெஞ்சங்கள் பார்வைப் பின்னல்களை இறுக்கமாய்ப் பின்னிடவும் வைத்தது --
கொடிய நொடியில், வெடியின் துடிப்பில் 
இளைய ஞாயிறு  ஒன்று இருளில் சுக்கல் சுக்கலானது --
இருள் ரத்தத்தால் சிவந்தது -
இந்தியாவின் கண்ணீர்த் துளிபோலும் 
இலங்கை கண்களைக் குத்தி விட்டதே !
தமிழே ! உனக்கேன் இந்த இழிவு ?
நம்பத்தான் முடிகிறதா ?
கொடுமையை ஏற்கத்தான் துணிகிறதா மனம் ?
அந்நிலையில்.... 
              
               &

ஓர் அழகிய இளைஞனின் 
அற்புத வாழ்வை 
அரைகுறை ஆக்கி விட்டார்;
தன் அகம் தமிழகம் என 
நெஞ்சகம் நம்பி
அன்பகம் காட்டி 
அருட்கை வேண்டிய 
புன்னகைப் பறவையைத்
தாய்க்குலம் ஒன்று
பூக்குலம்  தருவதாய்ச்
சீழ்க் குணம் கொண்டு
பெற்றதாய் சிலைமுன்பு 
உயிரைக் குடித்ததம்மா !
ஒ..! இது
ஆண்மை இழந்த
அதமப் புலிகளின்
அற்பச் செயலம்மா..
தமிழே தலை தாழ்ந்ததம்மா....!

-----சந்திர கலாதர்    
            

Is This Fair On My Part ?

நியாயம் தானா இது ?
             
&&
 
இதில் நாம் என்றோ நீங்கள் என்றோ குறிப்பிட்டால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் . ஆனால் இது எல்லோருக்குமே பொருந்தும் .
இருப்பினும் இங்கு நான் என்றே குறிப்பிட்டு கொள்கிறேன் --
             
&&&
 
நான் என்றோ மனம் இசைகையில் உடற்பயிற்சியோ அன்றி யோகாசனமோ கால் மணியோ/அரைமணியோ செய்துவிட்டு நாலு பேர் மத்தியில் தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது விடாமல் நான் ஆசனம் செய்கிறேன் என்று கூசாமல்
கர்வமாய்ப் பீற்றிக் கொள்கிறேன்--
"உனக்கு மனச்சாட்சியே கிடையாதா? "--என்னுள் குரல் கேட்கிறது
என்றோ ஒரு நாள் ஓர் கை ஏந்தி நிற்கும் வயோதிக ஜீவன் ஒன்றுக்கு மிக ஈன நாணயம் தேடித் துருவிப் போட்டு விட்டு நாலு பேரிடைப் பெரிய வள்ளல்போல் பெருமை பேசுகிறேனே --
"அடப் பாவி ! " என்றொரு குரல் அடிவயிற்று ஆழத்திலிருந்து எழுகிறது .
ஆண்டுத் துவக்கத்தில் அலுவலகத்தில் எந்த நிறுவனத்தான் நாட்காட்டியோ,நாட்குறிப்பேடோ, அன்புப் பரிசோ அளிக்கமாட்டனா என நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாலேயே அலைந்து திரிந்து விட்டு ,நாலு பேரிடைக் கையூட்டுக் கொடுமை பற்றி வாய் கிழியப் பேசுகையில் --
" நீயெல்லாம் உருப்படுவாயாடா ! " என என்னுள் காது கிழியச் சத்தம் கேட்கிறதே!
எளிய வாழ்வும் நடைமுறைகளையும் பற்றி காந்தி மகான் போல் போதனை செய்து வேஷமிட்டபடியே ஆடம்பர அலங்காரக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ' பளிச் பளிச் 'க்களில் ' பட்டும் பொன்னும் 'போட்டிபோட , நான் என் வீட்டிலேயே அரங்கேற்றுகையில் -
" என்ன வஞ்சகனடா நீ ! வெட்கமாயில்லை ? "என என்னுள் ஒன்று பொருமுகிறதே--
பேருந்துகளில் துண்டுபோடுவதுபோல் கூட்ட நெரிசலில் என் குடும்பத்தினருக்கு இடம் பிடித்துவிட்டு ,"இந்த ஜனங்க திருந்தவே மாட்டாங்க ! " என்று தான் இம்முயற்சியில் தோற்கையில் நீதி புலம்புகையில் --
 
" ஹாஹாஹ்ஹாஹா ! " என்று வாயொலியோடு கை ஒலியும் கேட்கிறதே!
அப்போது என் தலையும் குனிகிறதே !
-----சந்திர கலாதர்

Tuesday, June 28, 2011

When Migratory Birds Grace The Skies !

நீர்ப்பறவைகள் வானில் நீந்துகையில் ..!


பூர்ணிமை நிலவு ...
கீழைத் தொடுவானில் பூத்துவிட்டது--
குளிர்ப்பொழுது;
நிலவுப்பூ மலரும் வேளையில் கண்டு களிக்கும் பாக்கியம்
கிட்டவில்லையே ! .
சற்று நேரம் தாழ்த்திவிட்டேனே !
முகிற்கூட்டங்கள் குழுமி நின்று நிலவின் மணம் நுகர்ந்து மெய்மறந்து நிற்பனவோ ?
அணியணியாய் நீர்ப்பறவைகள் மாலை அந்தி வேளைகளில்
வானில் மிதந்து நீந்திச் செல்கின்றன --
நீர்நிலைகளை நாடி நிலம்விட்டு வான் எழும்பி ஒழுங்காய் ,அமைதியாய்ச் செல்கின்றன இதோ கரும் கொக்கினங்கள் --
இறைவா ! இப்பறவைகளைத்தான் எவ்வளவு அழகாக நீ படைத்துவிட்டனை !
வான்வெளிக்கே அழகு ஊட்டிக்கொண்டு அவை பறந்து செல்கையில் என் உள்ளம் எவ்வளவு பாடுபடுகிறது ?
ஏன் அங்குப் புரியாததொரு வேதனை வந்து புகல் வேண்டும்?
அடுத்த பிறவியில் என்னை இப்பறவைகளில் ஒன்றாய்ப் படைத்துவிடு--
இதயம் மகிழப் பறந்து ..ஆசைதீரப் பாடி வாழ்வை நுகர வேண்டும்-- கடற்பரப்பில் முன்னேறிவரும் நீள் அலைகள்போல் ....
ஆனால் சற்றும் ஓலமின்றி ..
புல்வெளியில் வளைந்து வளைந்து செல்லும் கருநாகப் பாம்பின் நெளிவு அசைவுகள் போல் பல நெளிவுகள் ஒடியாத தொடர்வாகப் பெற்று ...
ஆனால்,மிகத் தெய்வீகமாய் ...
எங்கோ பறந்து செல்லும் அவைகளைக் காணுறும்போதெல்லாம் ,
என் உள்ளம் எனை நீங்கி அவற்றைத் தொடர்ந்து செல்கின்றன !
என் பார்வையால் அவைகளைத் தொடர்ந்து செல்ல இயலவில்லை என்பதை உணர்கையில் இதயம் எவ்வளவு துணுக்குறுகின்றது !

----சந்திர கலாதர்