பாராட்டு ஏங்காதே ! உன் வழி செல் ...
உலகத்தின் மதிப்பீட்டை எதிர்நோக்குகிறாயா..
என் நண்பனே !
நிச்சயம் நீ மூடன் !
சற்றும் பொருட்படுத்தாதே --
கெஞ்சியும் கால்பிடிக்காதே !
கெஞ்சக் கெஞ்சக்
கடிகளே பெறுவாய் --
இகழ்ச்சி எக்காளமிடும் விழிகள்
உனைப் பார்த்துக் கொக்கரிக்கும்--
உன் பாதை எல்லாம்
வசைமொழிகள் விதைத்திருக்கும்--
ஏன் தெரியுமா ..
இது ஒரு கிறுக்கு உலகம் !
&
எனவேதான் சொல்கிறேன் --
நண்பனே ! நண்பனே !
அந்த அழகிய யாழினை
உன் கரங்கள் அணைத்திடு ;
அதன் ஒளிர் நுண் நரம்புகளில்
உன் உள்ளே இசைக்கும்
உணர்ச்சிகளின் ஸ்ருதிகளை
இசைவாகப் பாயவிடு --
ஆம் ..அந்தத் தேனினும் இனிய..தெய்வீக..
ஆன்மா கனியவிடும் கீதங்களின்
உயர்வு தாழ்வு ஆழங்களுக்கேற்ப
ராகப் பாலங்கள் இடு.
இசை வீதிகள் இயற்று --
உனது இசை நாதங்கள்
மரத்த செவி மந்த உலகினரால்
நுகர்வதற்கு அப்பாற்பட்டவை
என்பது உணர் .
&
உள்ளும் புறமுமாய்
இரு த்வனிகளும்
இயற்கையோடு சுந்தரமாய்
இயைந்து பரவட்டும் -
பரவசமூட்டும் உன் கீதங்களால்
உன் பாதைவெளி எல்லாம்
இனிய அதிர்வுகள் திகழட்டும் --
காற்று அணுக்கள்கூட
மென்மையான.. அமைதியான
உன் நாதச் சுவடுகளோடு
இணைந்து ஆடட்டும்.
&
தயங்காதே ! தளராதே !
உன் தனி வழியில்
தொடர்ந்து செல்--
திரும்பாதே உலகை நோக்கி ;
ஏன் எனில்....
உன் தலை குறி வைத்து
கற்கள் அம்பாக்கப்படும் --
ஏன் எனில்..
இது ஒரு கிறுக்கு உலகம் !
&
பளீர் எனப் பிரகாசிக்கும்
உன் அறிவின் முன்பு
கற்பனைக் கிண்ணம் வை--
உன் இதய நிலவின்
இனிய அமுதத்தை
அதனில் ஊற்று --
உன் தியான சக்தியால்
விரைவாகக் கடைந்தெடு --
அதில் சுற்றிச் சுழலும்
ஒளிரும் துளிகளின்
உன்னத மகிழ்வின்
பல்லவியைக் காண்--
உன் கீதங்களில் அதனைக்
கவர்ச்சியாய்க் கட்டு !
&
நல்லவற்றிற்கு இவ்வுலகம்
செவி சாய்ப்பதில்லை --
புது நறுமணம் அதன் நாசியைக்
கிளர்ச்சியுறச் செய்வதில்லை -
தன் சிறகுகளை இறுக்கிக்கொண்டு
பழகிய பழைய தடங்களிலேயே
ஊர்ந்து செல்ல விரும்புகிறது --
எனவே அது ..
உனை ஏற்று ஒரு வார்த்தை
பாராட்டாது இருப்பின்
கண்ணீர் ஒரு துளியும்
சிந்தி நில்லாதே .
&
உன் முயற்சிகளில்
சற்றும் தளராதே --
உன் யாழ் நரம்புகள்
சற்றே தளர்ந்து விட்டதா ?
உடன் முறுக்கேற்று --
விரைவாய் அதை மீட்டு ;
நரம்புகள் உன்னைப் பேசட்டும் !
மீதமுள்ள உன் வாழ்வுக் கோப்பை
கீதங்களால் நிரம்பி வழியட்டும் -
வாழ்வை முழுதாய் அனுபவி.
&
சிற்றுளியை எடு ;
கூர் செய் --
உன் சிறு உடம்பின் முன்
அமைதியும் கம்பீரமுமாய்
நிமிர்ந்து நிற்கும்
உயர் மலையைப் பார்--
இரவு பகலென அயர்வின்றி
அற்புதச் சிலைகளை
அழகாய் வடிவமை ;
சோர்வடையாதே --
தளர்ந்த நரம்புகளுக்கு
கற்பனை அமுதூட்டு--
&
இன்றிரவே ..
உன் சிறு படகைக் கட்டு--
கரைமீது இழுத்து வா ;
அன்பான அலைகள் அழைக்கையில்
கவிப் பேரானந்த மாக்கடலுள்
தள்ளி ஏறிவிடு-
உன் சிறு துடுப்புகளை
விரைவாக இயக்கு --
கடலுள் வெகு தொலைவு
முன்னேறிச் செல் --
இம் மணற்பரப்பைப்
பொருட்படுத்தாதே--
பொங்கும் மாக்கடலே
உன் உலகம் !
உன் கீதங்கள்
உல்லாச அலைகளின் பாடல்களே !
&
நீல மெத்தைக் கடலுள்
உன் பார்வை பாயட்டும் --
உன் விழிகள் எட்டிப் பிடிப்பது
அனைத்தும் படித்தறி--
இக்கரைச் சிந்தனையே இன்றிப்
புத்துலகங்கள்
புது மகிழ்வுகள்
புதுப் புகழ்கள் --
இவை நாடி அயராது துடுப்பிடு !
கரை திரும்பாதே -
ஏன் எனில்...
உன் சிறு படகைக்
கவிழ்க்கத் தயாராய்
யாராவது நிற்கக் காண்பாய் .
&
இரவின் ஸ்படிக அமைதியில்
தியானித்திரு --
மென்பனி பூசும்
இளம்காலைப் புத்துணர்வில்
மனம் வசம் செய் --
மாலைப் பொன் கனிவில்
கண் திறந்து
மனம் கூர் செய்--
உனது வேலைகளை
கூடாரமிடு --
ஏளன விழிகளுக்கு
உணவாகாதே !
எழுச்சி கனிவு எண்ணங்கள்
வற்றாது உன்னில் சுரந்து
உன் உறுதிப் பேனாமுனை கசிந்து
சாதனைகள் புரியட்டும் --
உன் நதியின் ஜீவன்
வற்றிப்போக விடாதே !
&
உணர்ச்சிமயமான உன் இதயத்தின்
பொறுமையான படைப்புகளைப்
படிக்கிறார்களா என நீ
வேவு பார்க்காதே --
அது உன்னை அரிக்கும் ;
கவலை சேர்க்காதே --
தொடர்ந்து தொடர்ச்சியாய் எழுதுவதே
தலையாய கடமை என்று கொள்.
உன் எழுத்துக்கள் கம்பீரமாய்
முகத்துக்கு முகம் காட்டி
உயரிய சிகரங்களை எதிர் காணட்டும் !
&
உறங்கும் உலகம்
விழித்திடும் முன்
சீறிப் பொங்கும் இதயத்தின்
வெள்ளம் அனைத்தையும்
கவிதை ஆற்றில் பாயவிடு !
அனைத்திற்கும்
அழகிய வடிவம் ..
நெடிய உயிர் ..
குன்றா ஒளி ..
வனப்புச் சிறகுகள் ..
அமைத்துக் கொடு --
அவற்றை எல்லாம்
தங்கக் காலையின்
எழிலார் வானில்
விடுதலை செய் !
&
அவை எல்லாம்
வண்ணச் சிறகுகள் படபடக்க
ஆனந்தச் சிலிர்ப்பில்
மத்தாப்புச் சிதறலாகட்டும்!
ஆன்மா பரவசப்படுத்தும் பாடல்களை
இதயம் திறந்து கூவட்டும் !
விண்ணில் ஏறித்
தொடுவானுள் தாழ்கையில்
செல்லும் திக்கெட்டும்
உன் படைப்பின்
மென் நறுமணம் தெளிக்கட்டும் --
&
அதுகாறும் நண்பனே !
மெய் வருத்தம் பாராய் !
கண் துஞ்சாய் !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment