Tuesday, February 14, 2012

காற்றே மெல்ல வா!
முதுகிலே அன்பாய்த் தட்டு --
பயனற்ற பழுப்பாய்
சுமையான தொடர்பாய்
பிடிப்பிலாப் பிடிப்பாய் 
பசுமைஇடை இகழ்வாய் 
இன்னும் எத்தனை நாள் ?
என் காலம் முடிந்தது
என் தொடர் அறு-
மழைத் துளிபோல்
மண் இறங்கி 
என் மரத்திற்கே 
பொட்டு உரமாகிறேன் !
உள்வலி தாங்கவில்லை
உடனே வாராயோ ?
 
---சந்திர கலாதர்    

Monday, February 13, 2012

புத்தம் புதுக்காலை
புத்தம் புதுச் சேதி
வானம் கொட்டுதே
மழைபோல் நனைக்குதே- .

மைனா ஒன்று தனியாய்
முகடு மீது அமர்ந்து
ஐந்தாறு மெட்டில்
அழகாய் இசைக்குதே
துள்ளச் செய்யுதே -

கீழ்த் திசை வானில்
தென்-வடல் நெடிதாய்
பூத மேகம் படுத்து
கதிரை மூட முட்டுதே -

மேகம் குத்திக் கிழித்து
ஒளிக்குழல் நூறு
வான் சீறிப் பாயுதே!
மேற்கில் மோதிச் சிவக்குதே-

டைடானிக் கப்பல் போலே
சரிபாதி உடைந்து
சந்திரன் சரிந்து கிடக்குதே -

தியானிக்கும் மரங்கள்
மௌனமொழி பேசி
அமைதி நிரப்புதே-

தினம் தினம் காலை
ஏமாந்ததேயில்லை !


----சந்திர கலாதர்